Saturday, August 7, 2010

"குட்டி" - [ சிறுகதை ]


குட்டி...
மு.அ. கமல்



‘தேவனாபுரம்’, அழகும், பசுமையும், நிறைந்த வேளாண்மையை முதன்மையாய் கொண்டிருந்த, ஒரு பகுதி, இது தற்போது மெல்ல, மெல்ல, நகரமாக வளர்ந்து கொண்டிருக்கும், ஓரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில், ‘வடிவேல்’ என்பவன் "கேப்பைக்கூழ்" விற்கும், சின்னத்தாயின் மகன். இவன் அந்த கிராமம், நகரமாக வளர, ஒருவகையில் காரணமாக இருக்கும், ஒரு கம்ப்யூட்டர் அலுவலகத்தில், ‘தமிழ் டைப்பிங்’ செய்பவனாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். இவனுக்கு இயற்கையின் மீதும், இயற்கையையொட்டி வாழும் விலங்குகள் மீதும் மிகவும் பற்று உள்ளவன்.

வழக்கம் போல் ‘சின்னத்தாய்’ பெரிய மண்பானையில் ‘கூழ்’ கரைத்து பானையில்  விபூதி பூசி குங்குமப் பொட்டு வைத்து பானைக்கு கன்ணேரு கழித்து,  வியாபாரத்தை, தொடங்கினாள்... வீட்டின் உள்ளே அலுவலகத்திற்கு  கிளம்பிக் கொண்டிருக்கும் தன் மகன் வடிவேலுக்கு கேட்கும்படி உரத்த குரலில்...

‘‘தம்பி வடிவேலு... பத்தாயத்துல இருக்குற, கம்பையும், நெல்லையும் எடுத்து ‘உரல்’ கிட்ட வைச்சிட்டுப் போப்பா” என்றாள்,

வடிவேல் உள்ளேருந்து ‘‘உங்களுக்கு, எத்தனை தடவைம்மா சொல்றது, போய் இயந்திர மில்-லுல இடிச்சிக்கிட்டு வாங்கன்னு’’ என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்க...

ஒரு பெரியவர், மண்வெட்டியுடன் வந்து மீசையை முறுக்கியவாறே ‘‘சின்னதாயி ஒரு கலயம் கூழ் கொடு?’’ என்று கம்பீரமாக கேட்க, சின்னதாய் வடிவேலிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வியாபாரத்தில் கவனத்தை செலுத்தினாள். வடிவேல் வேலைக்கு கிளம்பினான்.

சின்னத்தாயின் குடும்ப நண்பர் ரமணியின் வீட்டில் ஒரு ‘‘நாய்க்குட்டி’’ ஒன்று வளர்த்து வந்தனர். அந்த நாய்க்குட்டி பார்ப்பதற்கு குட்டையாகவும், காது நீண்டும், கண்கள் கண்ணாடி கோலிகுண்டுகளை போலும் அதன் ரோமம் வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறத்தில் பஞ்சுப் பொதியை போல  பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதை பார்த்த பிறகு யாரும் அதை தூக்காமல் போகமாட்டார்கள், அவ்வளவு அழகு. இந்த வாய்யில்லா ஜீவனுக்கு ரமணி ‘குட்டி’ என்று பெயரிட்டாள்.

திடீரென்று ரமணியின் வீட்டில் அனைவரும் ஒரு நாள் வெளியூர் செல்லும் சூழ்நிலை, ஏற்ப்பட்டது.
அதனால் ‘குட்டி’ வளர்க்கும் ரமணி சின்னத்தாய் வீட்டிற்கு குட்டியுடன் சென்றாள். ரமணியை பார்த்ததும், சின்னதாய்...

"வா! ரமணி என்ன  குட்டியோட வந்திருக்க நீ கூழ் வாங்க வரமாட்டியே!..." என்று  கேட்டதும்...

"மாமாவை, டெல்லி மருத்துவமணையில் சேர்த்திருக்காங்க வர பத்து நாள் ஆகும்,  குட்டி இங்கேயே இருக்கட்டும், நாங்க வந்ததும், வாங்கிக்கிறோம். குட்டியை விட்டு பத்து நாள் பிரியப்போகிறோம்" என்கிற ஏக்கம் ரமணியின் குரலில் இருந்தது

"கவலபடாத ரமணி நீ தைரியமா ஊருக்கு போய்ட்டுவா குட்டியை நான் நல்லா பாத்துக்கிறேன்" என்று சின்னத்தாய் ஆர்வமாய் சொன்னாள்.

தன் மார்பில் சிணுங்கிக் கொண்டிருந்த குட்டிக்கு செல்ல முத்தம் கொடுத்துவிட்டு சின்னத்தாயின் கையில் குட்டியை ஒப்படைத்தாள் ரமணி.

      அன்றிரவு வடிவேல் , வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்து வீட்டின், கேட்டை திறந்தான், கேட் திறக்கும் சத்தத்தை, கேட்ட ‘குட்டி’ அதன் மெல்லிய ‘குரலில்’ மெல்ல அழகாக, குரைத்தது,

‘‘வவ், வவ்...’’

அதை கேட்ட வடிவேல்...

‘‘நம் வீட்டில் நாய் குட்டியா !?" என்று சொல்லிக் கொண்டே அந்த நாய்க்குட்டியை, தூக்க ஓடிகிறான், நாய்க்குட்டி சின்னதாயின் அருகில் நின்றுக் கொண்டு அவனைப் பார்த்து வேகமாக குரைத்துக் கொண்டே இருந்தது, உடனே சின்னதாய் நாய்குட்டியிடம்,

‘‘டேய் ‘குட்டி’ என்னடா சத்தம். அது யார் தெரியுமா நம்ம அண்ணன்டா...!’’ என்று குட்டியிடம் வடிவேலை அறிமுகம் செய்து வைத்தாள். 

வடிவேலு நாய்க்குட்டியை தொட முயற்ச்சித்தான், அது வேகமாக குரைத்துக் கொண்டேயிருந்தது.

இரவுக்குள் அதை தூக்கி கொஞ்சிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை தொட பல விதத்தில் நெருங்கிக் கொண்டே இருந்தான், அது நெருங்க விடாமல் குரைத்துக் கொண்டே இருக்க, சின்னதாய் வேகமாக...

"டேய் தம்பி நேரம் ஆச்சில்ல போய் படுடா, அத ஏன்டா தொல்ல செய்துக்கிட்டு இருக்க..." என்று சொல்ல

அவன்... ‘‘சரிம்மா...’’ என்று சொல்லிக் கொண்டே நாய் குட்டியை பார்க்கிறான்.

அந்த குட்டி படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறது. அது தூங்கும், அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டே, அதன் மேல் விரல் வைத்து தடவிப் பார்த்து விட்டு, அதன் பக்கத்திலேயே, படுத்து தூங்கிவிடுகிறான். காலையில் சூரிய ஒளி, இவன் மேல் பட, இவன் மெல்ல, நெளிந்து, விழியைப் போட்டு கசக்கிக் கொண்டு, எழுகிறான். அவன் பக்கத்தில் நாய்க்குட்டி இல்லை என்றதும் பதட்டத்தோடு பார்க்கிறான்.


அந்த ‘குட்டி’ அவனுக்கு பின்பக்கம் இருக்கும், கதவுக்கு பின்னால் நின்றுக்கொண்டு, கழுத்தை மட்டும் நீட்டி, முட்ட கண்களை வைத்து முழித்தவாறே, காது இரண்டையும், புடைத்துக் கொண்டு, அவனை பார்த்துக் குரைக்கிறது.

‘‘வவ் வவ் , வவ் வவ்’’

படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான். குட்டி. குடுகுடு, என்று ஓடி சின்னத்தாயின் அருகில் நின்றுக் கொண்டு, அவனை பார்த்து, விடாமல் குரைத்துக் கொண்டே இருக்கிறது.

உடனே சின்னத்தாய், "காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா..."

"இல்லம்மா, நான் ஒண்ணும் செய்யல, அதுதான் என்னைப் பார்த்து பயந்து குரைக்குது’’ என்று வருத்தமாக சொல்கிறான்.

சின்னதாய் பச்சை பயிறை சுத்தம் செய்துக் கொண்டே, "வேலைக்கு நாழி ஆச்சிப்பாரு..." என்று அதட்டி, "பயிறு விதையை பக்குவம் செய்து எடுத்து வைக்கனும், போய் நொச்சி இலை, வேப்ப இலை, உடைச்சி வச்சிட்டு, வேலைக்கு சீக்கரம் போப்பா" என்று சொல்லி வேலையை தொடர்கிறாள்.

‘குட்டி’, சின்னதாய் போகும் இடமெல்லாம் அதுவும் செல்கிறது.


வடிவேல், "வா வா" என்று அதை கூப்பிட்டு, ராசியாக்க எவ்வள்வோ முயல்கிறான். ஆனால், அது குரைத்துக் கொண்டே இருக்கிறது.

சின்னதாய், "என்னப்பா சின்ன குழந்தையாட்டம் விளையாடிக்கிட்டிருக்க..! வேலைக்கு போப்பா" என்று சொன்னதும், அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு, வேலைக்கு செல்கிறான்.

பக்கத்து வீட்டில் 'அப்பு' என்பவன் ஒரு பெரிய ராஜப்பாளையத்து நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய், அதை கட்டிவைத்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, வடிவேல் வீட்டின் வேலியை தாண்டியது. அதைப் பார்த்த குட்டி, அதை குரைத்து விரட்டியது, இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ராஜபாளையம் நாய், குட்டியை நோக்கி பாய்ந்து.


குட்டியை வாயால் பிடித்து உதறிக்கொண்டிருக்க, குட்டி துடித்துக்கொண்டிருந்தது. இந்த நேரம்  சரியாக அங்கு வந்து சேர்ந்த வடிவேல் அந்த ராஜப்பாளையத்து நாயை அடித்து விரட்டினான். அப்போது தடுமாறி அடுப்புக்காக வெட்டி வைத்திருந்த கருவேல முள்மீது விழுந்ததினால்,  காலில் முள் குத்தி, கால் பலமாக வீங்கியது.


அவன் அம்மா, அவனுக்கு காலில் மாவுப்பத்து போட்டு, படுக்கவைத்திருந்தாள். அவன் அம்மா வேலைக்காக வெளியே செல்ல... அந்த குட்டி, வடிவேல் தன்மீது வைத்திருந்த பாசத்தைப் புரிந்து சோகத்துடன், ஏங்கிப் பார்த்துக்கொண்டிருந்தது.


அப்போது அவன் காலில் நிறைய எறும்பு ஏறியது, அதை பார்த்த அந்த குட்டி அவன் காலை நக்கி எறும்பை விரட்டிக்கொண்டிருந்தது, அதை மெல்ல உணர்ந்த அவன் வேகமாக எழுந்து எறும்பை தட்டி விட்டு, முதல், முறையாக அதை தூக்கி அணைத்துக் கொண்டு பாசத்தை வெளிப்படுத்தினான், அந்த குட்டியும் அவன் மேல் உள்ள பாசத்தால் அவன் முகத்தை, நக்கி நனைத்தது,  நண்பர்களாக இணைந்தனர்.


அந்த குட்டி, எப்போதும்போல் அவனைப் பார்த்து கோபமாக குரைத்தது போலில்லாமல், அன்றிரவு அவன் தூங்கும் வரை காத்திருந்து, அவன் மேல் தலைவைத்து, தானும் தூங்கியது. அந்த அளவிற்கு நெருங்கி நண்பர்களாக இணைந்து, நடைப்போட ஆரம்பித்தனர்.

அதன்பிறகு வடிவேல் தினமும் இரவில், வேலையை முடித்து, வேகமாக வீட்டிற்கு வந்து குட்டியுடன், விளையாடுவான். இப்படியாக இவர்கள் சிநேகம் தொடர்ந்தது.

ஒரு நாள் இவன் காலையில் வேலைக்கு கிளம்பி வீட்டின் வாசலில், குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது...

"வடிவேல் அண்ணா?" என்று கூப்பிட்டுக் கொண்டே கேட்டை திறந்து, இரண்டு சிறுவர்கள் உள்ளே வந்தார்கள், குட்டி அவர்களைப் பார்த்து வால் ஆட்டியது.

வடிவேல் அவர்களைப் பார்த்து "என்ன தம்பி?"  என்று கேட்டான்.

அதற்கு அவர்கள், "அண்ணா, நாங்க ஊரிலிருந்து திரும்பி வந்துட்டோம், அம்மா குட்டியை தூக்கிட்டு, வர சொன்னாங்க" என்று பேசிக் கொண்டே அந்த குட்டியை, "பப்புலுக்குட்டி... கட்டையா... வெள்ளையா..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்கள்.

அதைப் பார்த்து வடிவேல், செய்வதறியாது திகைத்து நின்றான். சிறுவர்கள் அதை தூக்க, அருகில் வந்தார்கள். அந்த குட்டி அவர்கள் பக்கம் போகாமல், பின்பக்கம் மெல்ல நடை போடுகிறது. முட்டை கண்களை வைத்துக் கொண்டு, யார்ப்பக்கம் போவது என்று தெரியாமல், திரு திரு என்று, முழித்துக் கொண்டு நிற்கிறது, அதை பார்த்த வடிவேல், அது யாரிடம் போவது என்று தெரியாமல், நிற்கிறது.     இதை புரிந்து கொண்ட வடிவேல், குட்டியின் அருகில் சென்று, அதை தூக்கி, கையால் தடவிக் கொடுத்தவாறே, சிறுவர்களிடம் ஒப்படைக்கிறான்.

சிறுவர்கள் நாய்க்குட்டியை, கையால் தடவிக் கொடுத்தவாறும், முத்தம் கொடுத்துக் கொண்டும், தூக்கி செல்வதை, சோகத்துடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

பிறகு சுதாரித்துக் கொண்டு, வேலைக்கு கிளம்புகிறான். போகும் வழியில் குட்டி வளர்ப்பவர்கள் வீடு இருப்பதால், அந்த வீட்டு வழியே நடந்து, கடந்து, செல்கிறான். சிறுவர்களின் அம்மா ரமணி, அந்த குட்டியை, இரும்பு கம்பியால் கட்டிப் போடுவதைப் பார்த்துக் கொண்டே வேலைக்கு செல்கிறான். 


அன்று குட்டியின் நினைவால், வேலையில் செலுத்த முடியாமல் தவிக்கிறான்.


அன்றிரவு வேலையை முடித்து, வீடு திரும்பி நடந்து வருகிறான். அப்போது சிவா என்ற ஆட்டோ ஓட்டும் நன்பண் ஒருவன், ஆட்டோவில் வந்து வடிவேலுவை எதிர்கொள்கிறான். அவன் வடிவேலுவிடம்...

"டேய் வடிவேலு நில்டா... நான் உங்க வீட்டு பக்கமாக தான் போறேன், ஏறுடா அப்படியே, வீட்டுல விட்டுட்டுப் போறேன்" என்று கூப்பிடவும் வடிவேல்...

"நீ போடா நான் நடந்தே போய்க்கிறேன்" என்று மறுக்கிறான். ஆனால் அவன் பிடிவாதமாக, ‘ஏறுடா’ என்று அவனை வற்புறுத்தி ஏற்றிக்கொள்கிறான். வடிவேலுவும், வேறு வழியில்லாமல் ஏறிக் கொள்கிறான்.


சிவா, ஆட்டோவை வேகமாக  ஓட்டுகிறான்.

"மெதுவா ஓட்டுடா" என்று வடிவேலு அவனை அதட்டுகிறான்.

ஆனலும் சிவா,  வேகமாக ஓட்டுகிறான்.


வடிவேல் மீண்டும்  கோபமாக... "ஏன்டா வேகமாக ஓட்டுற" என்று கேட்கவும்...


சிவா எதையும் காதில் வாங்காமல் வேகமாக ஓட்டுகிறான. பிறகுதான் வடிவேலுக்கு தெரிந்தது, அவன் ‘மது’ அருந்திருக்கிறான் என்று...


மீண்டும் வடிவேல், "டேய் நேராப் பார்த்து பொறுமையா ஓட்டுடா"

அதுக்கு அவன் அலட்சியமாக...

"ஓட்டுற எனக்கு தெரியாது..!? வாயை மூடிக்கிட்டு வாடா...", என்று பேசிக் கொண்டே வேகமாக ஓட்டுகிறான்.


தூரத்தில், அந்த குட்டி, ரோட்டில் பெரிய நாயுடன் விளையாடிக் கொண்டிருப்பதை வடிவேல், பார்த்து பதறுகிறான்...


உடனே...

‘‘டேய் ரோட்டுல நாய் இருக்குடா... பாத்துப்போ..." என்று பயந்து சொல்கிறான்.


சிவா அதற்கு திமிராக...

"எனக்கு தெரியும் நான் பத்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, ஆட்டோவை வேகமாக ஓட்டி குட்டியை இடித்து விடுகிறான். குட்டி அடிப்பட்டதில், வேகமாக குரைக்கும் சத்தம் கேட்கிறது.

‘‘வவவவவவவ்  வவவவவவவ்’’...

இதைக் கேட்ட வடிவேல், அவன் முதுகில் அடித்து, ‘‘ஆட்டோவை நிறுத்துடா" என்று சொல்லி நிறுத்தி, ஆட்டோவிலிருந்து, பதறியடித்து ஓடி வருகிறான், அந்த சத்ததைக் கேட்டு ரமணி வீட்டிலிருந்து, வேளியே வருகிறாள்.

"என்னாச்சி தம்பி" என்று பதற்றத்துடன் ரமணி கேட்கிறாள்...

வடிவேல், "நம்ம குட்டி மேல... ஆட்டோ..." என்று வருத்தத்துடன், மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல், தடுமாறுகிறான்.


‘குட்டி’, அந்த நீண்ட ரோட்டில், உயரமான ‘லைட்’ கம்பத்தின், வேளிச்சத்தில், அடிப்பட்டு, இரத்த கசிவுடனும், காயத்துடனும், கத்திக் கொண்டும், துடிதுடித்துக் கொண்டும் இருப்பதை, வடிவேல் பார்க்க முடியாமல், கண்ணில் கண்ணீருடன்,  ஆட்டோ ஓட்டி வந்த அவன் நண்பன் சிவாவை,...

"டேய், எவ்ளோ சொன்னேன்... மெதுவா வண்டிய ஓட்டுன்னு... பாவி.... இப்படி அந்நியாயத்துக்கு ஒரு உயிர கொண்ணுட்டியேடா... குடிக்கார பய" என்று திட்டிக் கொண்டும் அழுதுக்கொண்டும் இருக்க...


அதற்கு அந்த சிவா...


"விடுறா... நாய்தானே..." என்று அலட்சியமாக கூற... வடிவேலு கோபத்துடன், "டேய்.." என்று அவன்மீது பாய்கிறான்.


ரமணியக்கா வ ந்து அவனை தடுக்கிறாள்... 


"தம்பி, விடு தம்பி... அவன் சுய நினைவுல இல்ல... குடிச்சிருக்கான்..." என்று கூறி தடுக்க... இதற்குள் சிவா... பயந்து ஓடி விடுகிறான்.


குட்டி கத்தும் சத்தம், கொஞ்சம், கொஞ்சமாக அமைதியாகிவிட... வடிவேலு, அதை பார்க்கிறான். குட்டி இறந்துவிட்டது.


வடிவேலுவுக்கு, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. குடிப்பவர் மீதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர் மீதும், பயங்கர கோபம் வருகிறது. 


ரமணி அருகில் வந்து அமைதியாக...

"செத்துப் போச்சிப் போலருக்கு தம்பி, குடிக்கார பசங்க கொண்னுட்டாய்ங்க, ஒரு உதவி பண்ணுப்பா... என் பசங்க முழிக்கிறதுக்குள்ள, இதை எடுத்திட்டு போய், அந்த காட்டாமணக்கு காட்க்குள்ள புதைச்சிடுப்பா... பசங்க கேட்டா... குட்டி எங்கேயோ ஓடிப்போயிடிச்சின்னு சொல்லிக்கலாம்... பாவம் பிஞ்சுங்க நெஞ்சொடைஞ்சி போயிடும்..." என்று கண்ணில் கண்ணீரை துடைத்தபடி சொல்ல... வடிவேலு, குட்டியை தூக்கிறான். குட்டியின், நீண்ட வளர்ந்த முடி அவன் கையில் பட்டவுடன்,  அதனுடன் அவன் சேர்ந்து விளையாட தருண்ங்கள் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.


குட்டியை, சோகத்துடன் அடக்கம செய்கிறான்.


அடுத்த நாள்...


முதலாளி வீட்டிற்கு சென்று அவரிடம்...

"ஐயா, தமிழ் டைப்பிங் வேலை ஒண்ணு வந்திருக்க" என்று சொல்லி கடை சாவியை வாங்கிச் செல்கிறான்.


அன்று மாலை, அவன் ஊரில் எங்கு திரும்பினாலும் ஒரு போஸ்டர் அனைவரது கண்களிலும் படும்படி ஒட்டியிருந்தது. 







அருகில் வடிவேலு, கடைசி போஸ்டரை ஒட்டி முடித்து அலுப்புடன் திரும்பினான். 





அங்கே ஒரு பெரியவர், தனது மங்கிய பார்வையில், அந்த போஸ்டரை படிக்க முயன்று கொண்டிருந்தார். இதை கவனித்த வடிவேலு, அவருக்கு அருகில் சென்று நிற்க... 

"என்ன தம்பி... என்னத்த ஒட்டிக்கிட்டிருக்கே..?" என்று கேட்க...

வடிவேலு படித்து காட்டுகிறான்...


குடிக்காதே..!
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே..!
உயிரினங்களைக் கொல்லாதே..!


உடனே அந்த பெரியவர் நக்கலாக, சரித்துக் கொண்டு....

"சரிதான்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட...  

வடிவேலு, அனைத்தையும் ஒட்டி முடித்துவிட்டு, உலகத்தையே இழந்ததுப் போல் ரோட்டில், நடந்து வருகிறான். அப்போது, அழகான மெல்லிய குரலில், குரைக்கும் சத்தம் கேட்கிறது,

‘‘வவ் வவ் வவ்’’

வடிவேலு அங்கே, இங்கே, திரும்பி பார்க்கிறான், ஒரு பெரிய மரத்தின் இடுக்கில் நாய்க்குட்டி, நிறையே இருப்பதை பார்க்கிறான். அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் இவனை பார்த்து குரைத்துக் கொண்டே, ரோட்டை கடந்து, ஓடி வந்து அவனை நக்கிக் கொண்டும், அவன் மேல் ஏறி, விளையாடுகிறது, அந்த ‘குட்டி’யை வடிவேல் தூக்கிக் கொஞ்சுகிறான். அப்படியே மெல்ல கொஞ்சிக் கொண்டே நடைப் போட  ஆரம்பிக்கிறான்.

4 comments:

  1. நல்ல கதை கமல், படித்ததும் எனக்கும் ஒரு நாய் வளர்க்க வேண்டும்போல் ஆசையாக உள்ளது. தொடர்ந்து நிறைய எழுதவும்...

    -
    DREAMER

    ReplyDelete
  2. வணக்கம் கமல்
    ஒரு குட்டி கதையென்று வாசித்தேன் . குட்டி உயிரும் நம் உயிர்தான் என்பதை தெளிவாக கொடுத்துள்ளீர்கள்
    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  3. நல்ல முயற்சி அருமை நண்பரே

    ReplyDelete
  4. மிகவும் நல்லா எழுதியிருக்கீங்க கமல்.. என்னையும் அந்த குட்டிக்காக ஏங்க வைத்து விட்டீர்கள்..அருமை

    ReplyDelete